வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அஜய் ராய் போட்டியிட உள்ளார். 

உத்தரபிரேதசத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை 2 கட்ட தேர்தல் நிறைவு பெற்றள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், மே 12-ம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் நாளை பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

 

உ.பி.யில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கடந்த மாதம் அக்கட்சி தலைமை வெளியிட்டது. ஆனால், வாரணாசி தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்திருந்தது. மேலும் வாரணாசியில் மோடிக்கு எதிராக கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா போட்டியிடக் கூடும் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டு வந்தது. இது தொடர்பான கேள்வி பதிலளித்த பிரியங்கா காந்தி கட்சி தலைமை கேட்டுக்கொண்டால், வாரணாசியில் போட்டியிட தயாராக இருப்பதாக அதிரடியாக அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதும், வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து அஜய் ராய்தான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.