இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையே எந்த உரையாடலும் நடக்கவில்லை என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையே எந்தவொரு உரையாடலும் நடைபெறவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு டிரம்ப் பேட்டியளித்த டிரம்ப்பிடம் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த டிரம்ப், “ஆமாம், நிச்சயமாக. அவர் (பிரதமர் மோடி) என்னுடைய நண்பர். எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது எனக்குப் பிடிக்கவில்லை. இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று இன்று அவர் எனக்கு உறுதியளித்தார்.” எனக் கூறினார். சீனாவையும் அதைச் செய்ய வைக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத்துறையின் மறுப்பு

டிரம்ப் தெரிவித்த இந்தக் கூற்றுக்கு மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் மறுப்பு தெரிவித்தார்.

"அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டது போல, இரு தலைவர்களுக்கும் இடையில் நேற்று எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை," என்று அவர் தெளிவாகக் கூறினார். எரிசக்தி கொள்கையில் மாற்றம் இல்லை ரஷ்ய எண்ணெய் விவகாரம் குறித்து ஏற்கெனவே வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது எனவும் கூறினார்.

"இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமையாக இருந்து வருகிறது." என ரந்தீர் ஜெய்ஸ்வான் குறிப்பிட்டார்.

இந்தியாவின் எரிசக்தி கொள்கை

"நிலையான எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதுகாப்பு ஆகிய இரண்டும்தான் இந்தியாவின் எரிசக்தி கொள்கை. எங்கள் இறக்குமதி கொள்கைகள் முழுக்க முழுக்க இந்த நோக்கத்தால் வழிநடத்தப்படுகின்றன," என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை என்று அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.