பொதுத்துறையை சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ஓஹோவென்று பறந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது பரிதாபமான நிலையில் உள்ளது. ஏர் இந்தியா கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடனில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே ஏர் இந்தியாவின் நிதி நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதால் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பியதற்கு கூட பணம்  கொடுக்க முடியாமல் ஏர் இந்தியா தவித்து வருகிறது. 

விமானங்களுக்கு எரிபொருள் (விமான பெட்ரோல்) வாங்கிய வகையில் மட்டும்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கு  ஏர் இந்தியா ரூ.5 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாக்கி தொகையை கொடுக்காததால் கொச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தின. உடனே விமான போக்குவரத்து அமைச்சகம் தலையீட்டு ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் சப்ளையை மீண்டும் பெட்ரோல் வழங்க ஏற்பாடு செய்தது. 

இந்நிலையில் தற்போது மீண்டும் எண்ணெய் சப்ளையை நிறுத்தி விடுவோம் என எண்ணெய் நிறுவனங்கள் ஏர் இந்தியாவுக்கு எச்சரி்க்கை செய்துள்ளன. இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் ஏர் இந்தியாவுக்கு அனுப்பிய கடிதத்தில், உறுதி செய்யப்பட்ட மாதாந்திர தொகை செலுத்தபடவில்லை. 

மேலும் நிலுவையில் உள்ள பாக்கியும் கணிசமாக குறையவில்லை. அதனால் இம்மாதம் 18ம் தேதிக்குள் மாதாந்திர தொகையை செலுத்துங்கள் இல்லையென்றால் 6 முக்கிய விமான நிலையங்களில் எரிபொருள் சப்ளையை நிறுத்தி விடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.