அமெரிக்காவுக்கு 7 நாட்கள் பயணமாக வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி புறப்படுகிறார். ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் முன்பாக பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதில் முக்கியமானது. ஹூஸ்டன் நகரில் வரும் 22-ம் தேதி அமெரிக்க இந்தியர்கள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியாகும். இதில் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

'ஹவ்டி மோடி' அதாவது ஆங்கிலத்தில் 'ஹவ் ஆர் யு மோடி' என்பதன் சுருக்கமாக ஹவ்டி மோடி என்று நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு நியூயார்க்கில் மேடிஸன் சதுக்கத்தி்ல நடந்த கூட்டத்தில் கூட இந்த அளவுக்கு இந்தியர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த முறை இந்தியர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

இந்தியர்களுடன் சேர்ந்து இந்த முறை அமெரிக்காவின் 60 முக்கிய எம்.பி.க்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள், செனட் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அமெரிக்காவில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட விழாக்களிலேயே மிகப்பெரிய விழாவாக இது அமையும். அமெரிக்க எம்.பி.க்கள், வர்த்தக தலைவர்கள், பிரதிநிதிகள் என ஏராளமானோர் வருகை தர உள்ளனர்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கபதற்காக பிரதமர் மோடி 21-ம் தேதி அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்எல்லை வழியாகவே கடந்து செல்ல வேண்டும்.

ஆனால், காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டபின் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தி திரும்பியது. இந்த சம்பவத்துக்குப்பின் இந்திய விமானங்களை பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறக்க அந்நாடு தடைவிதித்தது. 

பின்னர் சில வாரங்கள் கழித்து அந்த தடையை நீக்கியது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்து, 370 பிரிவையும் திரும்பபெற்றது. இதனால் இந்தியா மீது கடும் அதிருப்தியுடனும், ஆத்திரத்துடனும் பாகிஸ்தான் இருந்து வருகிறது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் கொண்டு சென்றபோதிலும் அதற்கு பலன் இல்லை.

இதனடியை அமெரிக்க பயணத்துக்கு பாகிஸ்தான் வான் எல்லை வழியாகவே பிரதமர் மோடியின் விமானம் பயணிக்க வேண்டும். இதற்கான அனுமதியை இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானிடம் கேட்டிருந்தனர். ஆனால், திடீரென பிரதமர் மோடியின் விமானத்தை பறக்கஅனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது

பாகிஸ்தான் வெளியுறவத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறுகையில் “இந்தியப் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக பறக்க அனுமதிக்கமாட்டோம். இதை இந்தியத் தூதரகத்திடமும் நாங்கள் கூறிவிட்டோம்” எனத் தெரிவித்தார்.