சீனாவில் உருவான கொரோனா வைரஸ், சர்வதேசத்தையே பயங்கரமாக அச்சுறுத்திவருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன், ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா கோர முகத்தை காட்டிவருகிறது. கொரோனா உருவான சீனாவைவிட, இத்தாலியில் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் சமூக பரவல் லெவலுக்கு செல்லாமல் கட்டுக்குள் வைத்துள்ளது. 

எனினும் இந்தியாவில் தினந்தோறும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் சதமடித்த முதல் மாநிலம் மகாராஷ்டிரா தான். கேரளாவும் சதத்தை நெருங்கிவிட்டது. நமது நாட்டில் கொரோனாவிற்கு 10 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12லிருந்து 15ஆக உயர்ந்துள்ளது. இப்படியாக அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் யாருமே கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருமே கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனவும், பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் மற்ற மாநில அரசுகளுக்கும் நம்பிக்கையளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.