no more reservation charts on trains four stations
ரெயில்களில் காகிதத்தின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும், மரங்களை வெட்டுவதை தடுக்கும் நோக்கிலும் இனி, ரெயில் பெட்டிகளில் முன்பதிவு செய்த பயணிகள் இருக்கை, படுக்கை வசதி குறித்த பட்டியல்(ரிசர்வேஷன் சார்ட்) இனி ஒட்டப்படாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது சோதனை முயற்சியாக அடுத்த 3 மாதங்களுக்கு செயல்படுத்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தென்னக ரெயில்வேயின் சென்னை மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சோதனை முயற்சியாக அடுத்த 3 மாதங்களுக்கு தென்னக ரெயில்வே சார்பில் சென்னையில் இருந்து புறப்படும் ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் குறித்த இறுதிப் பட்டியல் பெட்டிகளில் ஒட்டப்படாது. இதன் மூலம் பெட்டிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம், காகிதச் செலவைக் குறைக்கலாம், பசை ஒட்டுவதால், பெட்டிகளுக்கு ஏற்படும் சேதத்தையும் தவிர்க்கலாம்.
அதேசமயம், முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களின் இருக்கை, படுக்கை குறித்த விவரம், இருக்கை எண், காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் அதன் எண், கடைசி நேர இருக்கை உறுதி செய்தல் ஆகியவை ஏற்கனவே குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இனி தீவிரமாக இது பின்பற்றப்படும். ஆதலால் பயணிகள் தெரிவிக்கும் செல்போன் எண்களுக்கு இனி இந்த விவரங்கள் அனுப்பப்படும்.
இந்த சோதனைத் திட்டம் சென்னை, புது டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் உள்ள ரெயில்நிலையங்களில் இருந்து புறப்படும் ரெயில்களில் செயல்படுத்தப்படும்” என்றார்.
அதேசமயம், பயணிகளில் ஒரு தரப்பினர், ரிசர்வேசன் சார்ட் ஒட்டாமல் தவிர்ப்பது தங்களுக்கு மிகுந்த சிரமத்தை தருகிறது. சில நேரங்களில் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ்.வராதபோது, இருக்கை நிலவரத்தை தெரிந்து கொள்ள மிகுந்த சிரமப்பட வேண்டியது இருக்கும் என வேதனை தெரிவித்துள்ளனர்.
