no meat for ramzan says rss
உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜான் இப்தார் விருந்தில் பால் மற்றும் பால் பொருட்களை மட்டுமே வழங்குவோம், இறைச்சி வழங்கமாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முஸ்லிம் பிரிவான முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் தெரிவித்துள்ளது.
வெள்ளிக் கிழமைகளில்…
இதுகுறித்து அந்த அமைப்பின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் மகிராஜ் துவாஜ் சிங் கூறியதாவது:-
உத்தரப் பிரதேசத்தில் பசுப் பாதுகாப்பை வலியுறுத்தி முஸ்லிம்கள் நோன்பு திறக்கும்போது பால் மற்றும் பால் பொருட்களை வழங்குவோம்.
இது ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் நடைபெறும். பாலும், அதில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யும் உடலுக்கு மிகவும் நல்லது. இதனை முஸ்லிம்களில் படித்தவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பின்போது நெய் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பசு இறைச்சியை உட்கொண்டால் பல்வேறு நோய்கள் நமக்கு ஏற்படும்.
ரமலானில் சிறப்பு தொழுகையின்போது பசுக்களை பாதுகாக்க முஸ்லிம்கள் பிரார்த்திக்க வேண்டும். அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பும் பணிகளில் முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்சின் தொண்டர்கள் செயல்படுவார்கள். இதன் மூலமாக இந்தியாவை வளப்படுத்துவோம்.
பாபர் மசூதி பிரச்சினைக்கு சுமுகமான முறையில் நாம் தீர்வு காண்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் முஸ்லிம்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக கடந்த 2002-ல் அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சனால் முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
