no houses permitted without rain water harvesting says adityanath
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.
குறிப்பாக அம்மா உணவகம் போல் பல மாநிலங்களில் தொடங்கப்பட்டுவரும் நிலையில், ஜெயலலிதா கொண்டுவந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மாநிலத்தில் கட்டாயமாக்கியுள்ளார். ஏற்கனவே, அம்மா உணவகம் போல் மாநிலத்தில் ஆதித்யநாத் தொடங்கிவிட்டநிலையில், இப்போது மழைநீர் சேகரிப்பு திட்டத்தையும் பின்பற்றுகிறார்.
உத்தரப்பிரதேசத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் எல்லாம் யாரும் வீடுகட்ட அனுமதியில்லை. வீட்டுக்கான வரைபடம் ஒப்புதலில் கண்டிப்பாக மழைநீர் சேகரிப்பு வசதி இருக்கவேண்டும்.இல்லாவிட்டால் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு, முதல்வர் ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்குப்பின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. கோரக்பூர் மடாதிபதியும், எம்.பி.யுமான ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து மாநிலத்தில் அதிரடியாக பல மாற்றங்களைச் செய்து வருகிறார்.

அரசு நிர்வாகத்தில் ஒழுக்க நெறிகள், பசுவதைக்கு தடை, சட்டவிரோத இறைச்சிகடைகள் மூடல், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆன்ட்டி ரோமியோ படை, சாமானியர்களுக்கான உணவு திட்டம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார்.
இந்நிலையில், மாநிலத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.அதில் கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாககுறைந்து விட்டதாகவும், செழிப்பான இடங்களிலும் கூட நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், மழைகாலம் முடிந்து, அடுத்து வரும் கோடை காலங்களில் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, முதல்வர் ஆதித்யநாத் நகர மேம்பாட்டுத்துறைக்கு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். மாநிலத்தில் புதிதாக வீடுகட்டுவோர், வீடுகளை மாற்றிஅமைக்க ஒப்புதல் பெறுவோர் அனைவரும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
வீடு கட்டும் வரைபடத்தில் கண்டிப்பாக மழைநீர் சேகரிப்பு திட்டம் இருந்தால்தான் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவி்ட்டார். மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை காக்கவும், மழைகாலத்தில் நீர்மட்டத்தை உயர்த்தவும் மழைநீர் சேகரிப்புதிட்டம் என்பது இன்றியமையாதது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கோடை காலத்தில் மக்கள் யாருக்கும் குடிநீர் வினியோகம் தடைபடாமல் பார்த்துக்கொள்ளவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை வேகமாக எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். கிராமங்கள், சிறுநகரங்களில் மக்கள் எளிதாக நீர் எடுக்கும் வகையில் மீண்டும் “கை பம்ப்”களை நிறுவவும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
மாநிலத்தின் நீர்பற்றாக்குறையை போக்கும் வகையில், “ஆக்ரா நீர் இணைப்புத் திட்டம்” மூலம், மதுரா மற்றும் பிருந்தாவன் இடையே இணைக்கும் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும், இந்த திட்டத்தை வரும் 2018 மார்ச் மாதத்துக்குள் முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார்.
மேலும் அடுத்த 100 நாட்களுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களும் சுத்தமாகவும், சாலைகள் குண்டும்குழியும்இல்லாமல் செப்பணிடவும் அதிகாரிகளுக்கு முதல்வர் கெடுவிதித்துள்ளார். மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளும், நகராட்சிகளும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும் .
சாலையில் அனாதைகளாக திரியும் மாடுகள்,கால்நடைகளை பிடித்து, அரசுஅமைத்துள்ள விலங்குகள் காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
