வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு 31-ந்தேதியுடன்(நாளை) முடிகிறது. இதற்கு அடுத்து தேதி நீட்டிப்பு அளிக்கப்படாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு செய்யப்படும் என்ற தகவலையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் மறுத்துள்ளது.ஆதலால் வரி செலுத்துபவர்கள் அனைவரும் உரிய ஆவணங்களை, விதிமுறைப்படி தாக்கல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வருமான வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கவும், புகார்களை தெரிவிக்கவும், ஆன்ட்ராய்ட செல்போனில் செயல்படும், மொபைல் ஆப்ஸ் ‘ஆயக்கர் சேது’ என்ற செயலியை அறிமுகம் செய்தார்.

இந்த செயலி மூலம் வருமான வரி செலுத்துபவர்கள் விவரங்களைத் தெரிவிக்கும் போது, அதிகாரிகளை நேரடியாக சந்திக்கும் வாய்ப்புகள் தவிர்க்கப்படும். ஊழல், கையூட்டு பெறுவதும் தடுக்கப்படும்.

மேலும், இந்த செயலியை வருமான வரி செலுத்துபவர்கள் ெசல்போனில் பதிவேற்றம் செய்துகொண்டால், அதிகாரிகளுடன் உரையாடும் வசதி, வருமானவரித்துறையின் முக்கிய அறிவிப்புகள், அறிவிக்கைகள், வருமானவரி தாக்கல் செய்யும் தேதி, முடியும் தேதி, ஆகியவற்றை பெறலாம்.