வங்கிகளில் கடும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் வங்கி கணக்கில் இருக்கும் சம்பள பணத்தை எடுப்பதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாதந்தோறும் அவர்களது சம்பள பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதேபோன்று, தமிழகம் முழுவதும் தனியார் கம்பெனிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் கோடிக்கணக்கான ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம், 1ம் தேதியே வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்த சம்பள பணத்தை ஏடிஎம்கள் மூலமே பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் கடந்த மாதம் வரை எடுத்தனர்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பிறகு பணப்புழகத்திலும் வங்கியின் நடைமுறைகளிலும் ஏராளமான கட்டுப்பாடுகள் வந்துள்ளன. குறிப்பாக போதிய பணம் இல்லாத நிலையில் 90 சதவீத ஏடிஎம்கள் வேலை செய்யாததால், அனைவரும் ஒரே நாளில் சம்பள பணத்தை எடுக்க வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையை வங்கிகள் எப்படி கையாளப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அதே நேரத்தில், வங்கிகளில் தொடர்ந்து கடும் பண தட்டுப்பாடு உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். சம்பள பணம் பெற இன்னும் ஒரே நாள்தான் உள்ளதால் ரிசர்வ் வங்கி சார்பில், அனைத்து வங்கிகளுக்கும் கூடுதல் பணம் அனுப்பி வைக்க வேண்டும்.
அதேபோன்று செயல்படாமல் முடங்கியுள்ள ஏடிஎம்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்கள் ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் அல்லது முன்பணம் வழங்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால், தமிழக அரசு வாய்மூடி மவுனியாகவே இருந்து வருவது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தனியார் நிறுவன ஊழியர்கள் குறித்த காலத்தில் சம்பளம் கிடைக்குமா என்று அச்சத்தில் உள்ளனர். மத்திய அரசு பணம் எடுப்பதில் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தியது, அது எந்த அளவுக்கு சாதகமாக இருக்கும் என்று அரசு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
