பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியதாக வெளியான தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.  

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் முகமது பைசல்,  
எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. 

இந்த முகாம்கள் பற்றிய தகவல்களை இந்தியாவிடம் கேட்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர் நாடுகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவின் பொய்யை அம்பலப்படுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர் நாடுகளின் தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்துச்சென்று காட்டத்தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவமும் இத்தகவலை மறுத்துள்ளது. அதன் செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், “பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் பொய் சொல்கின்றன” என்றார்.

இதற்கிடையே, இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி, இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியாவை பாகிஸ்தான் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.