நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வு மூலம் தான் மருத்துவப்படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் இந்த நீட் தேர்வுக்கு தமிழ்நாடு தொடக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி ஆளுநருக்கு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அனுப்பப்பட்டது. இதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதை அடுத்து ஆளுனரால் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வரை, தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் 2 ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.

அதற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது நீட் தேர்வு குறித்து தேசிய மருத்துவ ஆணையரகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையரகம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு, பொதுப் பிரிவினருக்கு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 என்றும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டது.

ஆனால், நீட் தேர்வில் வயது உச்ச வரம்புக்கு எதிராக பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. பொதுப்பிரிவில் தேர்வு எழுதுவோருக்கு வயது உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்று நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன. ஆனால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையரகம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
