பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள  நிதீஷ்குமார், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை  கூட்டி இன்று தனது பலத்தை நிருபிக்க உள்ளார். 

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம். ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்து கடந்த தேர்தலில் போட்டியிட்டன. 

இதையடுத்து இந்த கூட்டணி வெற்றிபெற்று, ஐக்கிய ஜனதாதளத்திம் நிதீஷ்குமார் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. ராலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி துணை முதலமைசசராக பொறுப்பேற்றுக் கொண்டார்,

இந்நிலையில் தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் அவரை பதவி விலக வேண்டும் என நிதீஷ்குமார் வலியுறுத்தி வந்தார்.ஆனால் இதற்கு தேஜஸ்வி மறுத்ததால், மகா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதீஷ் குமார், பாஜகவுன் கூட்டணி அமைத்து மீண்டும் நேற்று முதலமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் நிதீஷ்குமார் இன்று சட்டப் பேரவையில் தனது பலத்தை நிரூபிக்க உள்ளார்.

பீகார் சட்டசபையில் மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு, 123 தொகுதிகள் தேவை. இதில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு, 71, பா.ஜ.,வுக்கு, 53 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதைத் தவிர பா.ஜ., கூட்டணிக் கட்சிகள் சார்பில், ஐந்து பேரும், மூன்று சுயேச்சைகளும், நிதிஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

அதன்படி, மொத்தம், 132 பேரின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது. ஆர்.ஜே.டி.,க்கு, 80 எம்.எல்.ஏ.,க்களும், காங்கிரஸ் கட்சிக்கு, 27 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். இதைத் தவிர இந்தியக் கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு மூன்று பேரும், ஒரு சுயேச்சையும் எம்.எல்.ஏ.,வாக உள்ளனர். அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மையை நிரூபித்த பிறகு, அமைச்சரவையை விரிவுபடுத்த, நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். நாட்டில் மொத்தமுள்ள, 31 மாநில சட்டசபைகளில், 15 சட்டசபைகளில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி உள்ளது.