சிறுமிகள் மாயமான விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அங்குள்ள நித்யானந்தா சீடர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நித்யானந்தா ஆசிரமத்தில் நடக்கின்ற பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், பாலியல் இச்சைக்கு பயன்படுத்தப்பட்ட சிஷ்யைகள் குறித்தும் குறிப்பிட்டு கனடா  நாட்டு சிஷ்யை ஒருவர் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, மதத்தை முகமூடியாக அணிந்து கொண்டு நித்யானந்தா செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், பெங்களூருவை அடுத்த ராமநகர் மாவட்டம் பிடதியில் பரமஹம்ச நித்யானந்த தியானபீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். நித்யானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள 2 மகள்களை மீட்டு கொடுக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மேலும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்னவென்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் குஜராத் போலீசார் கர்நாடகாவின் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நேற்றும் 2வது நாளாக தொடர்ந்தது. காணவில்லை என்று கூறப்படும் சிறுமிகள் குறித்து போலீசார் அப்போது விசாரணை மேற்கொண்டனர். 

நேற்று பிற்பகல் ஒரு மணி வரை தொடர்ந்த இந்த சோதனைக்கு பிறகு, குஜராத் போலீசார் அகமதாபாத்துக்கு திரும்பினர். ஆனால், நித்யானந்தா ஆசிரமத்தில் மேற்கொண்ட சோதனை குறித்து போலீசார் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால், சிறுமிகள் ஆசிரமத்தில் இருக்கிறார்களா? இல்லையா என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.