நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்றும், 2019 –ல் அவருக்கு சவால்விட வேறு யாரும் இல்லை என்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம்  மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டன.

இதில் வெற்றி பெற்று நிதீஷ்குமார் முதலமைச்சராகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி துணை முதலமைச்சராகவும் இருந்தனர்.

இந்நிலையில் திடீரென நிதீஷ்குமார் மற்றும் லாலு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்த நிதீஷ்குமார்  ராஜினாமா செய்துவிட்டு அடுத்த நாள் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சரானார். இதற்கு ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் சரத் யாதவ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ,  வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராவார் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

2019ல் அவருக்கு சவால் விட வேறு யாரும் இல்லை. இவருக்கு எதிராக வல்லமை கொண்டவர்கள் யாரும் இல்லை என்று என்றும் கூறினார்.

பா.ஜகவுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு என்பதை தனது பணி மற்றும் அரசின் செயல்திறன் மூலம் நிருபிப்பேன் என்றும் நிதீஷ்குமார் தெரிவித்தார்.