நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா வரும் 31-ந் தேதியோடு ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

தான் பணியாற்றி வரும் கொலம்பியா பல்கலையில் இருந்து தனக்கு விடுமுறை நீட்டிப்பு கிடைக்கவில்லை என்பதால், தன்னை பதவியில் இருந்து விடுவிக்கும்படி, பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார ஆய்வாளாரும், பேராசிரியருமான அரவிந்த்பனகாரியா(வயது64) அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் இந்திய அரசியல் பொருளாதார துறையில் பணியாற்றி வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த திட்டக்குழுவை கலைத்துவிட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பை மத்திய அரசு கொண்டு வந்தது. அப்போது, பனகாரியாவை அழைத்து வந்த மத்திய அரசு நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக நியமித்தது.

இது குறித்து அரவிந்த் பனகாரியா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ நான் பணியாற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் எனக்கு ஆகஸ்ட் 31-ந் தேதிக்கு பின் விடுமுறையை நீட்டிக்க மறுத்துவிட்டது. ஆனால், நான் நிதி ஆயோக் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பிரதமர் மோடியிடம் தெரிவித்துவிட்டேன். ஆதலால், வரும் 31-ந் தேதியோடு பதவியில் இருந்து விலகுகிறேன்’’ எனத் தெரிவித்தார்.