Nipah virus fever spread in kerala
ஸ்வைன் ஃபுளூ, பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தொடர்ந்து தற்போது நிஃபா என்ற வைரஸ் மூலம் கேரளாவில் ஒருவகையான மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த காய்ச்சங்லகள் எல்லாம் கேரளத்திலிருந்துதான் தமிழகத்துக்கு பரவியதாக பொதுவாக கூறப்படுகிறது. இந்நிலையில் வௌவால் மூலம் பரவும் நிஃபா என்ற வைரஸ் காய்ச்சல் கேரளத்தில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் முகமது ஸாலிஹ், அவரின் சகோதரர் முகமது ஸாபித் மற்றும் இவர்களின் உறவினர் மரியம் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர்.
அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள் நிஃபா வைரஸ் தாக்கியதால் இறந்திருப்பதை உறுதி செய்தனர். மரணமடைந்த முகமது ஸாலிஹ் சகோதரர்களின் தந்தை மூஸக்கையும் நிஃபா வைரஸ் காய்ச்சல் தொற்றியுள்ளது.

டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் அருகில் இருப்பவர்களிடம் தொற்றாது. ஆனால், நிஃபா வைரஸ் தாக்கியவர்களின் அருகில் இருப்பவர்களை எளிதில் தாக்குகிறது. நிஃபா காய்ச்சலால் இறந்த முகமது ஸாபித்தை பராமரித்த நர்ஸ் லினியும் அதே நோயர்ல் பாதிக்கப்பட்டு இறந்தார்.
நிஃபா வைரஸ் மேலும் பரவக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக அரணமடைந்த லினியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. மலப்புறம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் நிஃபா வைரஸ் காரணமாக இதுவரை 10 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

பழங்களை உண்டு வாழும் ஒருவகையான வவ்வால் மூலம் இந்த நிஃபா வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட ரத்த மாதிரிகள், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வெளிவந்த பிறகே இந்த காய்ச்சல் குறித்த மேலும் பல விவரங்கள் தெரியவரும் என கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

வௌவால் கடித்த பழங்களைச் சாப்பிடக் கூடாது எனவும் மாம்பழங்களை நன்கு கழுவி சாப்பிட வேண்டும் எனவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். லேசான காய்ச்சலுடன் இதன் அறிகுறிகள் தொடங்குகிறது. பிறகு, மூச்சு விடுவதில் சிரமம், கடின தலைவலி ஏற்பட்டு அது மூளை காய்ச்சலாக மாறுகிறது. இந்த வைரஸ் தக்கப்பட்டவர்களின் 75 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர்.
