ஒடிசாவில் கிணற்றில் விழுந்த தங்கையை காப்பாற்ற தன்னுயிரை துச்சமாக நினைத்த சிறுமிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்தில் தாராபா பகுதியில் உள்ள கெந்துமுன்டா கிராமத்தை சேர்ந்தவள் சாயாகான்டி பாக் (9). அங்குள்ள ஒரு பள்ளியில் 4-வது வகுப்பு படித்து வருகிறார். விளையாடிக்கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென 2 வயது தங்கை மிலி 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தாள்.

உடனே துடிப்பாக செயல்பட்டு, அருகில் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களிடம் குழந்தை கிணற்றில் விழுந்த தகவலை 
தனது பெற்றோரிடமும், கிராம மக்களிடமும் கூறி அவர்களை இங்கு அழைத்து வரும்படி கூறினாள். உடனே  தங்கையைக் காப்பாற்ற வீரச் சிறுமி சாயாகான்டி பாக் சிறிதும் தாமதிக்காமல் கிணற்றில் குதித்தாள். 

இந்த சம்பவம் அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து கயிற்றின் உதவியோடு இருவரையும் பத்திரமாக மீட்டனர். தங்கையைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த அந்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் நிச்சயம், இச்சிறுமிக்கு வீரதீர விருது கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.