1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தாவுத் இப்ராகிம், பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 20-க்கும் அதிக இடங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். மும்பை முழுக்க ஒரே சமயத்தில் சுமார் 20 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
மும்பையின் சுற்றுவட்டார பகுதிகளான பந்த்ரா, நக்படா, பொரிவாலி, கொரிகான், பாரெல், சாண்டாக்ரூஸ் போன்ற பகுதிகளில் போதை பொருள் கடத்தல், ஹவாலா ஆபரேட்டர்கள், தாவுத் இப்ராகிமின் ரியல் எஸ்டேட் மேலாளர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான குற்றவாளிகளை பிடிக்க ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சட்ட விரோத செயல்கள்:
இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் தாவுத் இப்ராகிம் மற்றும் அவரின் டி கம்பெனி மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு நிறுவனம் வழக்குப் பதிவு செய்து இருந்தது. 1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தாவுத் இப்ராகிம், பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவரின் நிழல் உளக நிறுவனம் டி கம்பெனி என்று அழைக்கப்படுகிறது.
தாவுத் இப்ராகிம் மற்றும் அவரது டி கம்பெனி மட்டும் இன்றி அவருக்கு துணையாக செயல்பட்டு வரும் சோட்டா ஷக்கீல், ஜாவெத் சிக்னா, டைகர் மேனன், இக்பால் மிர்ச்சி, சகோதரி பார்கர் உள்ளிட்டோர் மீதும் விசாரணை நடத்தப்பட இருப்பதாக தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சர்வதேச குற்றவாளி:
1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான தாவுத் இப்ராகிமை சர்வதேச தீவிரவாதியாக இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் 2003 ஆம் ஆண்டு அறிவித்தன. மேலும் தாவுத் இப்ராகிம் தலைக்கு 25 மில்லியன் டாலர்கள் சன்மானம் வழங்குவதாகவும் அறிவித்து இருந்தன.
