பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு சொந்தமான பயிற்சி மையத்தை என்.ஐ.ஏ. கையகப்படுத்தியுள்ளது
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அது தொடர்புடைய ரிஹாப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா இனாம்ஸ் கவுன்சில், நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹூமன் ரைட்ஸ் ஆர்கனைசேஷன், நேஷனல் உமன் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அண்ட் ரிஹாப் பவுண்டேஷன் ஆகிய இயக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்திய நிலையில், இந்த தடையானது பிறப்பிக்கப்பட்டது. மேலும், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி அதனை பயங்கரவாத செயல்களுடன் இணைக்கப்பட்டும் வருகிறது.
அந்த வகையில், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான கேரளாவில் உள்ள மிகப் பழமையான பயிற்சி மையத்தை, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ், பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக தேசிய புலனாய்வு முகமை இணைத்துள்ளது. இது, ஆயுதங்கள் மற்றும் உடல் பயிற்சி அளிக்கும் மையம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான முயற்சிகளின் ஒருபகுதியாக இந்த பயிற்சி மையம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து இதுவரை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் 6 பயிற்சி மையங்களை தேசிய புலனாய்வு முகமை இணைத்துள்ளது. தேசிய புலனாய்வு மையம் இணைக்கும் பி.எஃப்.ஐ-க்கு சொந்தமான 18ஆவது சொத்து இது என்பது கவனிக்கத்தக்கது.
கேரளாவின் மஞ்சேரியில் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த பயிற்சி மையம் அமைந்துள்ளது. கிரீன் வேலி அகாடமி என்று அழைக்கப்படும், 'கிரீன் வேலி அறக்கட்டளை' (GVF) மூலம் இந்த பயிற்சி மையம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த மையம் ஆரம்பத்தில் தேசிய வளர்ச்சி முன்னணியின் பணியாளர்களால் பயன்படுத்தப்பட்டது, பின்னர் அதனை பி.எஃப்.ஐ பயன்படுத்த ஆரம்பித்ததாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்! சம்பளம் மற்றும் EMI பேமெண்ட்களை பாதிக்கும்!
இந்த பயிற்சி மையத்தை பயன்படுத்தி பி.எஃப்.ஐ உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சி, உடல் பயிற்சி மற்றும் வெடிமருந்துகளின் பயன்பாடு மற்றும் சோதனை குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும், எடுக்கப்பட்டதாகவும், கொலைச் செயல்கள் உள்ளிட்ட குற்றங்களைச் செய்தபின், ஏராளமான உறுப்பினர்களின் மறைவிடமாக இந்த மையம் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள மலபார் ஹவுஸ், பெரியார் பள்ளத்தாக்கு, வள்ளுவநாடு ஹவுஸ், காருண்யா அறக்கட்டளை மற்றும் திருவனந்தபுரம் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை (TEST) ஆகிய ஐந்து பி.எஃப்.ஐ பயிற்சி மையங்களை பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையதாக இதற்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை இணைத்துள்ளது.
ஆயுதங்கள் மற்றும் உடல் பயிற்சி, சித்தாந்தங்களைப் பரப்புதல் மற்றும் பல்வேறு குற்றவியல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படுகிரது என கூறி பி.எஃப்.ஐ-யின் 12 அலுவலகங்களையும் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை இணைத்துள்ளது.
கல்வி அறக்கட்டளைகள் என்ற போர்வையில் இத்தகைய பயிற்சி மையங்களை இயக்கப்படுவதாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி பி.எஃப்.ஐ அமைப்பு மற்றும் தனி நபர்கள் என 59 பேர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
