சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ பாதையில் பாஸ்டேக்’ அட்டை இல்லாமல் சென்ற 18 லட்சம் பேரிடமிருந்து ரூ.20 கோடியை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) அபராதம் வசூலித்துள்ளது.

இதுகுறித்து தேசியநெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் 350 சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் செல்லலாம். அங்கு செலுத்த வேண்டிய தொகை ஏற்கெனவே பணம் செலுத்தி நாம் பெற்றுள்ள பாஸ்டேக் அட்டையிலிருந்து தானாகச் செலுத்தப்படும்

அதேசமயம், பாஸ்டேக் வழியில் டேக் இல்லாமல் வாகனங்கள் சென்றால் சுங்கக் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும்., இந்த விதிமுறையை மீறி ஏமாற்ற முயற்சி செய்த 18 லட்சம் பேரிடம் ரூ.20 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆா்எஃப்ஐடி தொழில்நுட்பத்தில் இயங்கும் ஃபாஸ்டேக் அட்டை இதுவரை 1.55 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமும் பாஸ்டேக் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பில் பரிவா்த்தனை நடைபெறுகிறது டிஜிட்டல் பரிவா்த்தனையை ஊக்குவிப்பதற்காக பாஸ்டேக் அட்டை வாங்குவதற்கான கட்டணமும் கடந்த 15-ஆம் தேதி முதல் வரும் 29-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. வாகனப் பதிவு சான்றிதழை காண்பித்து இலவசமாக பாஸ்டேக் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது