Newxt president of India

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது.

எனவே, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, புதிய குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் வியூகம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, எதிர்கட்சிகள் சார்பாக யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தியை பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்த தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல், 2009-ம் ஆண்டுவரை மேற்கு வங்காள மாநில ஆளுனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.