Asianet News TamilAsianet News Tamil

அடுத்த தீபாவளியை அயோத்தியில் புதிதாக கட்டிய ராமர் கோயிலில் கொண்டாடுவோம்... கொளுத்திப் போடும் சுப்பிரமணிய சாமி

Next Diwali celebration in Ram Temple says Subramanian Swamy
Next Diwali celebration in Ram Temple, says Subramanian Swamy
Author
First Published Dec 3, 2017, 4:17 PM IST


அடுத்த ஆண்டு தீபாவளிப்பண்டிகையை அயோத்தியில் நாங்கள் புதிதாகக் கட்டிய ராமர் கோயிலில் கொண்டாடுவோம் என்று பா.ஜனதா கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான சுப்பிரமணிய சாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக இந்து அமைப்புகளுக்கும், முஸ்லிம் அமைப்புளுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, சுப்பிரமணிய சாமி இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

நாங்கள் அடுத்த ஆண்டு தீபாவளிப்பண்டிகையை அயோத்தியில் புதிதாக கட்டப்போகும் ராமர்கோயிலில்தான் கொண்டாடுவோம். ராமர் கோயில் கட்டும் பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கும்.

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் ராமர் கோயில் தயாராகிவிடும். ஏனென்றால், கோயில் கட்டுவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் தயாராக இருக்கின்றன. அனைத்தும் கொண்டுவந்து சேர்க்கப்பட்டு, தயார் செய்யப்பட்டுவிட்டன. சுவாமி நாராயண் கோயிலை பொருத்தும் பணி மட்டுமேதான் இருக்கிறது.

ராமர் கோயில் கட்டுவதற்காக புதிதாக ஏதும் சட்டம் இயற்றத் தேவையில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது,  உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது அதில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததாக நிரூபிக்கப்பட்டால், அந்த இடத்தை இந்துக்களுக்கு கொடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கோயில் இருந்தது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

இருந்தபோதிலும் எங்களால் புதிதாக சட்டத்தை கொண்டு வர முடியும். ஆனால், அதுதேவையில்லை. ஏனென்றால், நாங்கள் இந்த வழக்கில் வெற்றி பெற்றுவிடுவோம். இந்த வழக்கில் வெற்றி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்த விஷயத்தில் சன்னி வக்புவாரியம் எதிர்த்து தர்க்கம் பேசமாட்டார்கள் என நம்புகிறேன்.

அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் ஆழ்ந்து விசாரணை நடத்தி இருக்கிறது. ஆதலால், சன்னி வக்பு வாரியத்தின் வாதத்தை மீண்டும் கேட்காது.

அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்துவது அடிப்படை உரிமை வாதிட்டு இருக்கிறேன்,  ஆவணங்களையும் அளித்து இருக்கிறேன். அதில் முஸ்லிம்களுக்கு எந்த உரிமையும் இல்லை.அவர்கள் சொத்தின் மீது மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios