இந்தியாவின் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 மார்ச் 1 முதல் தொடங்கும். இது சுதந்திர இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பாக இருக்கும். இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

இந்தியாவின் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கணக்கெடுப்பு நாட்டின் முக்கிய சமூக-பொருளாதார விவரங்களை அறிய உதவும். மேலும், சுதந்திர இந்தியாவில் எடுக்கப்படும் முதல் சாதிவாரியான கணக்கெடுப்பாகவும் இருக்கும்.

இருப்பினும், லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளிலும் யூனியன் பிரதேசங்களிலும் மக்கள்தொகை கண்க்கெடுப்பு சற்று முன்னதாக, 2026 அக்டோபரிலேயே தொடங்கும்.

இரண்டு கட்டங்கள்:

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் இதற்காக நீண்ட கேள்விப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. சாதி மற்றும் துணைச் சாதி குறித்த கேள்விகள் அதில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு சாதிகள் மற்றும் துணைச் சாதிகள், ஒவ்வொன்றிலும் உள்ளவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருக்கும் என்றும் அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை:

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து வந்தது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை சாதி அடிப்பையில் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி என்றும் பாஜக தலைவர்கள் விமர்சித்தனர்.

பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி மத்திய அரசு அறிவித்தது. சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து வந்த பாஜக அரசு திடீரென அதனை தானே நடத்துவதாக அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனங்களும் எழுந்தன. தற்போது, சாதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும் தேதியும் வெளியாகியுள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பின்:

பொதுவாக, இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

கடைசியாக, 2011 இல் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. 2021ஆம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எனவே, 2027 இல் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பாக இருக்கும்.

அரசு தனது கொள்கைகளை வகுப்பதற்கு, மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதாரத் தரவுகள் துல்லியமாக இருப்பது அவசியம். அரசின் நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தவும் இந்தத் தரவுகள் மிகவும் முக்கியமானவை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.