உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 4 லட்சத்திற்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்திருக்கிறது. இதுவரையிலும் இந்தியாவில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தற்போது 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்கள் தடையின்றி செயல்பட வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இக்கட்டான நேரத்தில் செய்தி ஊடகங்கள் தங்கு தடையின்றி இயங்குவது மிக முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது.

பத்திரிக்கை அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் விநியோக கூட்டமைப்பு, டிவி சேனல்கள், டெலிபோர்ட், ஓ.பி வேன், டிடிஹச், ஹச்.ஐ.டி ,செயலாக்கங்கள், எப்.எம் மற்றும் வானொலி நிலையங்கள், எம்.எஸ்.ஓக்கள், லோக்கல் கேபிள் ஆபரேட்டர்கள், செய்தி ஏஜென்சிகள் போன்றவை தடையின்றி செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும்போது பத்திரிக்கைகள் தடையின்றி வெளியாகும். அதன்மூலம் பொதுமக்கள் கொரோனா குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற இயலும்.