தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 82 லட்சத்து 6 ஆயிரமாக இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 2 கோடியே 16 லட்சமாக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில்  இரு சக்கர வாகனங்களின் பெருக்கத்துக்கு ஏற்ப விபத்துக்களும் அதிகரித்தபடி  உள்ளதாகவும், கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 12,200 பேர் மரணம் அடைந்துள்ளதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 73 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாததால்தான் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் அமைத்த குழுவின் பரிந்துரையை ஏற்று உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துக்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டு 7,767-க்கு குறைவாகவும், 2020-ம் ஆண்டு 3,572-ஐ தாண்டக்கூடாது என்றும் இலக்கு நிர்ணயம் செய்து மாநிலங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தநிலையில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் புதிதாக இருசக்கர வாகனங்கள் விற்கும்போது அதன் உற்பத்தியாளர்கள் அல்லது டீலர்கள் 2 ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது.