திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கான அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. உட்பட 4 பேரை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்துள்ளார். 

ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தை நிர்வகிக்க 16 பேர் உறுப்பினர்கள் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியால் கலைக்கப்பட்டது. பின்னர், சுப்பா ரெட்டியை அறங்காவலர் குழு தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், அறங்காவலர் குழுவில் புதிதாக 24 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆந்திர அறநிலையத்துறை தலைமைச் செயலர், அறநிலையத் துறை ஆணையர், தேவஸ்தான செயல் அலுவலர், திருப்பதி நகர்ப்புற வளர்ச்சி கழக தலைவர் ஆகியோரும் அறங்காவல் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 28 பேர் அடங்கிய இக்குழுவில் ஆந்திராவிலிருந்து 8 பேரும், தெலங்கானாவிலிருந்து 7 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 4 பேரும், கர்நாடாகாவிலிருந்து 3 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், டாக்டர் நிச்சிதா, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுரு, வைத்தியநாதன் ஆகியோரும் புதிய உறுப்பினர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.