நாட்டில் ஏராளமாக இருக்கும் ராம்நாத் கோவிந்த்களுக்காக உழைப்பேன் என புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்ராம் நாத் கோவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது-

ஜனநாயகத்தின் மிகச்சிறப்பை இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது. இந்த நேரம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. என்னிடம் மிகப்பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதும், ஜனாதிபதி பதவியின் மாண்பை காப்பது எனது கடமையாகும். நாட்டில் உள்ள அனைத்துமக்களுக்கு எனது வணக்கத்தை தெரிவிக்கிறேன். அனைவரும் இன்புற்று இருக்கும் வகையில் நான் உற்சாகமாக உழைப்பேன்.

டெல்லியில் இன்று காலையில் இருந்து பெய்கின்ற மழை எனது சிறுவயது பருவத்தை நினைவூட்டுகிறது. எனது கிராமத்தில் களிமண் வீட்டில், ஒருகுடிசையில் நான் எனது சகோதரர்களுடன் இருப்பேன். மழை பெய்தவுடன் வீட்டின் கூரையில் இருந்து மழைநீர் ஒழுகும். இதனால் வீட்டின் ஒரு மூலையில் மழை நிற்கும்வரை ஒதுங்கியே நிற்போம்.

இதுபோல் ஏராளமான ராம் நாத் கோவிந்துக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இந்த பலத்த மழையிலும் தங்களை வருத்திக்கொண்டு, உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் மக்களும் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்கிறேன், பருன்ங்க் கிராமத்தைச் சேர்ந்த இந்த ராம்நாத்கோவிந்த் கடின உழைப்பாளிகளின் பிரதிநிதிகளாக ஜனாதிபதி மாளிகையில் இருப்பான். 

ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதா கிருஷ்ணன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம்,பிரணாப் முகர்ஜி போன்ற சிறப்பு மிகக்க ஆளுமை கொண்டவர்கள் போல் இந்தபதவியை வகித்துள்ளார். அவர்கள் எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனர். கடின உழைப்பும், நேர்மையும் கொண்டவர்களுக்கு இது மிகச்சிறந்த உதாரணம்.

நாட்டின் உயரிய பொறுப்புக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அது எனது இலக்கும் இல்லை. நான் எனது சமூகத்துக்கு இடைவிடாது உழைத்தது, நாட்டுக்காக செய்த சேவை என்னை இங்கு கொண்டுவரச் செய்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.