பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மாநிலங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பு அமைப்புகளின் அனுமதியில்லாமல் அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் பிரதமருக்கு அருகே செல்லக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது போன்று பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சிலர் திட்டமிட்டுள்ளதாக புனே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரதமரின் பயணங்களின் போது பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது  அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் பாதுகாப்பு படையினரின் அனுமதியில்லாமல் பிரதமருக்கு அருகே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் போது சாலை பேரணி செல்லவேண்டாம் என்று பிரதமரை பாதுகாப்பு அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.  பிரதமர் பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய செல்லும் அதிகாரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் பயணங்களின் போது துணை ராணுவப்படையினர் மற்றும் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.