தேர்தல் முடிந்த பிறகு அனைத்து மாநில கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைக்கும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உறுதிப்பட கூறியுள்ளார்.
மேற்கு வங்களாத்தில் குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடிக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. பாஜகவின் வெற்றியைத் தடுக்க மேற்கு வங்க முதல்வர் பானர்ஜி அதிரடி வியூகம் வகுத்துவருகிறார். தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடியும் மம்தா பானர்ஜியும் கடுமையாகத் தாக்கி பேசிகொள்கிறார்கள். இந்நிலையில் நாடியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது பாஜகவை கடுமையாகத் தாக்கி அவர் பேசினார்.

 
 “தேர்தல் முடிந்த பிறகு மத்தியில் பா.ஜ.க.வோ அல்லது காங்கிரசோ புதிய ஆட்சியை அமைக்கப்போவது இல்லை. அனைத்து மாநில கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைக்கும். இதன் காரணமாகவே இந்திய ஃபெடரல் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். மத்தியில் ஆண்டுகொண்டிருக்கும் மோடி அரசை நாங்கள் வெளியேற்றுவோம்.
பாஜக தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசிவருகிறது. 5 ஆண்டுகளாக அவர்கள் பொய்களை மட்டுமே அவிழ்த்துவிடுகிறார்கள். அதேவேளையில் அப்படிபேசும்போது பெரிய வாக்குறுதிகளைக் கொடுக்க தவறுவது இல்லை. பொய்யர்களின் கட்சியாக பாஜக உள்ளது.  பொய் கூறியே கலவரத்தை தூண்டி வருகிறார் மோடி.
பணமதிப்பு நீக்கத்தை பாஜக அரசு செயல்படுத்தியது. அதன் விளைவால் மக்கள் வேலை இழந்தனர். விவசாயிகள் துயரத்துக்குத் தள்ளப்பட்டனர். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால் ஏதாவது நடந்ததா? விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்கும் மோடி தீங்கு இழைத்துள்ளார். எனவே மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது.”
இவ்வாறு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.