மகாராஷ்டிராவில் அதிரடித் திருப்பமாக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாக முதல்வராக இன்று காலை பதவி ஏற்றார்.  துணை முதல்வராக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் பதவிஏற்றார். அதாவது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.


கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் இதேபோன்று தேவேந்திர பட்னாவிஸ்க்கு தொடக்கத்தில் சிவசேனா ஆதரவு அளிக்கவில்லை. ஆனால், வெளியில் இருந்து சரத்பவார் தலைமையிலான என்சிபி ஆதரவு அளித்தது. அதன்பின் சில மாதங்களுக்குப்பின் மீண்டும் சிவசேனா ஒட்டிக்கொண்டு அமைச்சரவையில் இடம் பெற்றது கவனிக்கத்தக்கது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் முதல்வராக பதவி ஏற்பார். காங்கிரஸ், சிவசேனா, என்சிபி இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுவிட்டது என்று சரத் பவார் நேற்று இரவு கூறிய நிலையில் மிகப்பெரிய அரசியல் திருப்பமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியி்ல் அமர்ந்துள்ளது. சிவசேனா தனித்துவிடப்பட்டுள்ளது.


மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது.எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. 


மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் நேற்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தின. இந்த 3 கட்சிகளும் ஆட்சி அமைக்கும் இறுதிக்கட்ட நிலையில் இருந்தன. இதனால் இன்று 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த கூட்டத்துக்குபின் என்சிபி சார்பில் பேசிய அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக், நாளை காலைக்குள் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க கோருவோம் என்று தெரிவித்திருந்தார்.