புதுடெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு நடந்தது என்ன? யார் மீது தவறு? என்பது குறித்து பார்க்கலாம்.

புது டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் 

நாட்டின் தலைநகர் புது டெல்லி ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகாகும்பமேளா நடந்து வரும் நிலையில், அங்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

டெல்லி ரயில் நிலையத்தின் 13 மற்றும் 14 என இரண்டு நடைமேடைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. அப்போது 15வது நடைமேடையில் ஒரு ரயில் வந்துள்ளது. இதற்காக மொத்த பயணிகளும் அந்த ரயிலில் ஏறுவதற்காக சென்றபோது கடும் கூட்ட நெரிசல் காரணமாக பலர் அதில் சிக்கிக் கொண்டனர். இதில் 18 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். 

நெரிசலுக்கு காரணம் என்ன? 

மகாகும்பமேளாவுக்கு செல்ல இவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும் டெல்லி ரயில் நிலைய அதிகாரிகள் போதிய முன்னேற்பாடுகளை செய்யாததே விபத்துக்கு முக்கிய காரணமாகும். ஏற்கெனவே டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் புறப்படும் ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டன. 

அத்துடன் நேற்று இரவு ஸ்வதந்த்ரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி உள்ளிட்ட சில ரயில்கள் தாமதமாக வந்ததும், நடைமேடை குறித்த முறையான அறிவிப்பு இல்லாததும் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை

டெல்லி ரயில் நிலையத்தில் நேற்று விபத்து நடந்த நேரம் அங்கு ரயில்வே போலீசாரும், NDRF பணியாளர்களும் இருந்துள்ளனர். ஆனால் நிலைமை கையைமீறீ சென்றதால் அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்க்க மக்களை சமாதானப்படுத்த அறிவிப்புகள் மற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

''ரயில் நிலையத்தில் எங்களுக்கு ஒரு முப்படை அலுவலகம் உள்ளது. நான் எனது பணி முடிந்து திரும்பும்போது, ​​ஒரு பெரிய கூட்டம் இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை. மக்களை சமாதானப்படுத்த முயற்சித்தேன். மேலும் அதிக எண்ணிக்கையில் மேடையில் கூடுவதைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டேன். இந்த விபத்தை தடுக்க ரயில்வே நிர்வாகம் கடுமையாக உழைத்து வந்தது. ஆனால் மக்கள் யாரும் கேட்கவில்லை'' என்று டெல்லி ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பலி எண்ணிக்கையை மறைக்கும் அரசு?

அதே வேளையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் ஆனால் அரசு அதை மறைத்து அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கையை காட்டவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ''இந்த விபத்துக்கு பிறகு டெல்லி ரயில் நிலையத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இனிமேல் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்கூட்டியே சரியாக திட்டமிடாமல் மெத்தனமாக இருந்து விட்டு ஏராளமான அப்பாவி மக்களின் உயிர்கள் போனபிறகு நடவடிக்கை எடுத்து என்ன பயன்? என்று எதிர்க்கட்சிகளும், மக்களும் ரயில்வே துறைக்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.