கடந்த 8ம் தேதி செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து நாடு முழுவதும் பரபரப்புக்கு உள்ளானது.

இதனைதொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வைத்திற்குக்கும் பழைய பணத்தை வங்கிகளில் கொடுத்து புதிய 5௦௦, மற்றும் 2௦௦௦ ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம் என அரசு அறிவித்தது. ஆனால், வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் போதிய பணம் கிடைக்காததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து செல்வதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே அனைத்து வங்கிகளிலும் ஏ.டி.எம்.மையங்களிலும் போதிய பணத்தை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள பணம் அச்சடிக்கும் மையத்தில் இருந்து வங்கிகளுக்கு புதிய .500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், மைசூருவில் உள்ள அச்சடிக்கும் மையத்தில் இருந்து ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு லாரி மூலம் பணம் அனுப்பட்டது.

இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி துவிக்கலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் இருந்த பண மூட்டைகள் சாலையில் கவிழ்ந்ததால் பண நோட்டுகள் சாலை முழுவதும் சிதறின.

லாரிக்கு பின்னால் 4 வாகனங்களில் சென்று கொண்டிருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உடனடியாக அவர்களது வண்டிகளை நிறுத்தினர். பின்னர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பணத்தை யாரும் எடுக்காத அளவிற்கு அங்கு பாதுகாப்பாக நின்றனர்.

இதனை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் சாலையில் சிதறிய பணத்தை மீட்டு வேறு வாகனங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.