ரயில் நிலையங்களில் 2400 புதிய ஏடிஎம் கள்… ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..
நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் 2,400 புதிய ஏ.டி.எம்.கள் அமைக்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரெயில்வே துறையின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ஆண்டுதோறும் 1 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான நிதியில் பெரும்பகுதியை ரெயில்வே தனது சொந்த முயற்சியில் திரட்டிக்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு முதல் ரெயில்வேக்கு தனி பட்ஜெட் கிடையாது என்பதால் பொது பட்ஜெட்டில் இவ்வளவு பெரிய தொகையை நிதி அமைச்சகம் ஒதுக்குவதும் சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.
இதையடுத்து, பயணிகளிடம் கட்டணம் பெறாமல் பல்வேறு வழிகளில் நிதியை திரட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. இதற்காக கட்டணம் இல்லா வருவாய் என்னும் கொள்கையை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அடுத்த வாரம் தொடங்கிவைக்கிறார்.
அதன்படி நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 2,400 ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்படும் என்றும் இந்த ஏ.டி.எம்.கள் நடைமேடையின் எல்லைப் பகுதி அல்லது ரெயில் நிலையத்தில் அதிக அளவில் இடவசதி இருக்கும் இடங்களில் நிறுவப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதேபோல் ரெயில் தண்டவாளங்களையொட்டி பயன்படுத்தப்படாத பகுதி, ரெயில்வே மேம்பாலங்கள், ஆளில்லாத கேட்டுகள் ஆகிய பகுதிகளில் விளம்பர பலகைகளை கூடுதலாக வைக்கவும் ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.
பிரமாண்ட எல்.இ.டி. திரைகள் மூலம் ரெயில் நிலைய கட்டிடங்கள், நடைமேடைகள், நடை மேம்பாலங்கள் போன்ற இடங்களில் ஒருங்கிணைந்த ரெயில்வே ஒளிபரப்பு தொடங்கப்படும். இந்த ஒளிபரப்பு பழைய டெல்லி, வாரணாசி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 25 நகர ரெயில் நிலையங்களில் முதன் முதலில் தொடங்கிவைக்கப்படும். இதைத்தொடர்ந்து பல முக்கிய ரெயில் நிலையங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் வானொலி மற்றும் வீடியோ மூலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கப்படும் என்றும் சினிமா, கலை நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை ஒளிபரப்பவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST