ரிசர்வ் வங்கி அவசர கதியில் அடித்து வெளியிடும், புதிய ரூ.500 நோட்டுக்களை பார்த்து டுவிட்டரில் சிரிப்பாய், சிரிக்கிறார்கள்.

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில், பிரதமர் மோடி, ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய ரூ.2000 நோட்டும், ரூ. 500 நோட்டும் வெளியிடப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.

இதன்படி, ஏற்கனவே ரூ.2000நோட்டு அச்சிட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டு விட்டது. புதிய கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் அந்த நோட்டு வெளியானது. முதலில் ரூபாய் நோட்டில் சாயம் போகிறது என்ற வதந்திகள் வந்தன. அதை மத்திய அரசு மறுத்து அறிவிப்பு வெளியிட்டது. அதில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன எனவும் தெரிவித்தது.

இந்நிலையில், புதிய ரூ.500 நோட்டை கடந்த சில நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால், மும்பை, டெல்லி, உள்ளிட்ட பெரிய நகரங்களில் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களில் மட்டுமே அந்த நோட்டு தற்போது மக்களுக்கு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சுதிர்சந்தியாலா என்பவர் அந்த நகரில் உள்ள எச்.டி.எப்.சி. ஏ.டி.எம். மையத்தில் இருந்து நேற்று ரூ.500 நோட்டுக்களை எடுத்தார். ஆனால், அதில் அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் ஒரு புறம் நன்றாக அச்சடிக்கப்பட்டும், மறுபுறம் பாதி அச்சடிக்கப்பட்டு, மீதம் அச்சடிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அது குறித்து சுதிர் சந்தியாலா கருத்து தெரிவித்து, அந்த ரூ.500 நோட்டுக்கள் படத்தையும் டுவிட்டரில் பதிவிட்டார்.

இது நெட்டிசன்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு, கிண்டல் செய்து வருகிறார். ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் அவசரகதி வேலை இப்போது சிரிப்பாய் சிரிக்குது....