சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய அரசு உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் மாதம் வாபஸ் பெற்றது.

அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. விரைவில் நிலைமை சீராகும் என மத்திய அரசு பதிலளித்தது. அவ்வப்போது புதிய நோட்டுகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2005ல் வெளியிடப்பட்ட 20 ரூபாய் நோட்டுகளை போல், புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படம் மற்றும் எஸ் வரிசையும், ரிசர்வ் வங்கி கவர்னர் சுர்ஜித் படேல் கையெழுத்தும் அச்சிடப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.