வந்தே பாரத் ரயிலில் பாட்டு பாடிய 12 பெண்கள்! தெற்கு ரயில்வேயை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
வீடியோவில் 12 பெண்கள் ஒரு பாடலைப் பாடுகின்றனர். ஒருசிலர் அவ்வப்போது தங்கள் மொபைலில் பாடல் வரிகளைப் பார்த்து பாடலைப் பாடுவதையும் காண முடிகிறது.
சென்னையில் இருந்து மைசூரு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் குழு பாடும் வீடியோவை தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவின் தலைப்பில், தெற்கு ரயில்வே 'மகிழ்ச்சியின் சிம்பொனி' என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, நெட்டிசன்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
"சென்னை - மைசூர் வந்தே பாரத் விரைவு ரயிலில் மகிழ்ச்சியின் சிம்பொனி! இந்த இளம் பெண்கள் தங்கள் இனிமையான பாடல்களால் பயணத்தை ஒரு மகிழ்ச்சிகரமான இசைப் பயணமாக மாற்றும் தருணத்தைப் பாருங்கள்" என்று தெற்கு ரயில்வேயின் பதிவில் கூறப்பட்டுள்ளது.
வீடியோவில் 12 பெண்கள் ஒரு பாடலைப் பாடுகின்றனர். ஒருசிலர் அவ்வப்போது தங்கள் மொபைலில் பாடல் வரிகளைப் பார்த்து பாடலைப் பாடுவதையும் காண முடிகிறது.
இந்த வீடியோ மார்ச் 12 அன்று பகிரப்பட்டது. வெளியிடப்பட்டதிலிருந்து, இது ஆறு லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. சுமார் 2,000 லைக்குகளையும் பெற்றுள்ளது. பலர் தங்கள் கருத்தை இந்தப் பதிவில் ரிப்ளை செய்துள்ளனர்.
ஒரு பயனர், "பொது இடத்தில் தொல்லையை கொடுக்கும் இதுபோன்ற பயணிகளை வாயை மூடுவதற்கு நான் எவ்வளவு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்? இந்த நடத்தையை நீங்கள் ஊக்குவிக்கிறீர்களா? யாராவது இந்த நவீன, அமைதியான ரயிலில் தூங்க விரும்பினால் என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"உண்மையாக, இது எரிச்சலூட்டக்கூடியது. அவர்கள் ஹெட்ஃபோன்களை அணிந்துகொண்டு அவர்களின் பாடலைக் கேட்கலாம், அல்லது ரயிலில் இருந்து இறங்கி பிறகு அவர்களின் குழு செயல்பாடுகளைச் வைத்துக்கொள்ளலாம். ரயிலில் பயணம் செய்ய பணம் செலுத்தினால், பயணத்தில் நல்ல வசதியும் தூக்கமும் கிடைக்க வேண்டும். இசையை தனிப்பட்ட முறையில் இயர்போன் மூலம் கேட்க வேண்டும்" என்று மற்றொருவர் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
இன்னொருவர், "இது சிம்பொனி அல்ல. சர்க்கஸில் கூச்சல்" என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.