நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பாதுகாவலர் 117 வயதில் மரணம்!
உத்தரபிரதேசத்தில் நேதாஜியின் நெருங்கிய பாதுகாவலர் கர்னல் நிசாமுத்தீன் முதுமை காரணமாக மரணமடைந்தார்.
சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் கர்னல் நிசாமுத்தீன் பணியாற்றியுள்ளார்..
உத்தரபிரதேசத்தின் அசம்காரில் வசித்து வந்த இவர் முதுமை காரணமாக நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 117. அவரது உடல் நேற்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 1942-ம் ஆண்டு அசம்காரில் இருந்து சிங்கப்பூர் சென்ற நிசாமுத்தீன், ஆங்கிலேயரின் ராணுவத்தில் சேர்ந்தார்.
பின்னர் அதிலிருந்து விலகி நேதாஜியின் ராணுவத்தில் இணைந்தார். நிசாமுத்தீனிடம் கனரக ஆயுதங்களை கையாளும் வலிமையும், வாகன ஓட்டும் திறமையும் இருந்ததால், அவரை தனது நெருங்கிய பாதுகாவலராகவும், ஓட்டுனராகவும் நேதாஜி நியமித்தார்.
இந்திய தேசிய ராணுவத்தின் கர்னல் என்ற உயர் பதவியும் அவருக்கு வழங்கினார்.
மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்த நிசாமுத்தீன் 1969-ல் அசம்கார் திரும்பினார். அங்கு தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
1945-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் நேதாஜி கொல்லப்பட்டார் என்று கூறப்படும் தகவலை நிசாமுத்தீன் தொடர்ந்து மறுத்து வந்தார். அந்த சம்பவத்துக்கு பின்னரும் தான் நேதாஜியுடன் இருந்ததாக அவர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
