ஆந்திராவில் பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ. உட்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம், நெல்லூர் புறநகர் தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி. இவரது ஆதரவாளர் ஸ்ரீகாந்த் ரெட்டி. வெங்கடாசலம் மண்டல பரிஷத் மேம்பாட்டு அதிகாரி (எம்பிடிஓ) சரளா. இவர், எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக செயல்படவில்லை. இதனால், எம்எல்ஏ ஸ்ரீதர் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர் ஸ்ரீகாந்த் ரெட்டி ஆகியோர் சரளாவிடம், ‘உங்கள் வீட்டின் மின் இணைப்பு, குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும், வீட்டின் முன் பள்ளம் தோண்டப்படும்’ என்று மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால், அதிர்ச்சியடைந்த சரளா, நெல்லூர் புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் 3 நாட்கள் தொடர்  போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் நேற்று முன்தினம் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் எம்.எல்.ஏ. மிரட்டிய விஷயத்தை ஜெகன் மோகன் ரெட்டியிடம் தெரிவித்தார். உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

இதனையடுத்து பெண் அதிகாரியை மிரட்டிய ஸ்ரீதர் ரெட்டியை போலீசார் கைது செய்தனர். பின்னர், இருவரையும் நேற்று 11 மணியளவில் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். தனது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. என்றும் பொருட்படுத்தாமல், கைது செய்துள்ள சம்பவம் குறித்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.