நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம்.. காங்கிரஸ் விமர்சனத்துக்கு முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் பதிலடி..

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் பிரதமரின் மகன் பதிலடி கொடுத்துள்ளார்.

Nehru memorial Museum's name change.. Former Prime Minister Chandrasekhar Son responds to Congress criticism..

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (NMML) இனி பிரதமர்கள் மியூசியம் மற்றும் சொசைட்டி என்று அழைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நேருவின் பெயர் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் எதிர்வினையாற்றி வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்தார். அவரின் பதிவில் “ வரலாறு இல்லாதவர்கள் மற்றவர்களின் வரலாற்றை அழிப்பதாக விமர்சிக்கிறார்கள். நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்றும் துரதிர்ஷ்டவசமான முயற்சி, நவீன இந்தியாவின் சிற்பியும், ஜனநாயகத்தின் அச்சமற்ற காவலருமான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஆளுமையைக் குறைக்காது. இது பாஜக-ஆர்எஸ்எஸ்ஸின் கீழ்த்தரமான மனநிலையையும் சர்வாதிகாரப் போக்கையும் காட்டுகிறது” என்று விமர்சித்தார்.

இந்த நிலையில் பாஜக மாநிலங்களவை எம்.பியும், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனுமான நீரஜ் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ எனது தந்தை முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஜி எப்போதும் தேச நலனுக்காக உழைத்தவர். அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். ஆனால் அவர்கள் ஒரு குடும்பத்தை தாண்டி பார்த்ததில்லை. ஆனால் தற்போது பிரதமர் கட்சி பாகுபாடுகளை தாண்டி பிரதமர்களை கௌரவிக்கிறார். ஆனால் காங்கிரஸ் தற்போது கொந்தளிக்கிறது. என்ன ஒரு கொடூரமான அணுகுமுறை.

அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் நான் கேட்க விரும்புகிறேன் – அவர்கள் பிரதமர் அருங்காட்சியகத்திற்கு எத்தனை முறை சென்றிருக்கிறார்கள்? சோனியா ஜி அல்லது ராகுல் ஜி எப்போதாவது அங்கு சென்றிருக்கிறார்களா? ஒரு குடும்பத்திற்கு அப்பாற்பட்டவர்கள் நம் தேசத்தை கட்டியெழுப்பியுள்ளனர் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத அவர்களின் இயலாமை, வக்கிரமானது கண்டனத்திற்குரியது.

பிரதமர்களை கௌரவிப்பதை மறந்துவிட்டு, காங்கிரஸும் அவர்களது அரச பரம்பரையும் தங்கள் வம்சத்தைச் சேராத பிரதமர்களை அவமதித்துள்ளனர். நரசிம்ம ராவிடம் அக்கட்சி நடந்த் கொண்ட விதம், நமது அரசியல் வரலாற்றின் மிகவும் வெட்கக்கேடான அத்தியாயங்களில் ஒன்றாகப் போய்விடும்.

பிரதமர் அருங்காட்சியகத்தில், கட்சி பேதமின்றி ஒவ்வொரு பிரதமருக்கும் கண்ணியமும் மரியாதையும் கிடைத்துள்ளது, அவர்களின் பங்களிப்பு சிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios