நேரு நினைவு அருங்காட்சியம் நூலகம் பெயர் மாற்றம்; காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த ஜேபி நட்டா!!
மத்திய அரசு தற்போது நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இடையே காரசார விவாதம் துவங்கியுள்ளது.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரில் உள்ள நிறுவனங்கள் மற்றும் கட்டிடங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரமே மத்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்த செய்தியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் இனி பிரதமர் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து இருந்தது. அதாவது மறைந்த பிரதமர் நேருவின் அதிகாரபூர்வ வீடான சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் ''பிரதம மந்திரி சங்கராலயா'' என்று பெயர் மாற்றத்திற்கான துவக்க விழா நடைபெற்று இருந்தது. தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மீண்டும் இந்தப் பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் அற்பத்தனமானது என்று குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ''பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸின் சிறுமைத்தனமான, சர்வதிகார அணுமுறையை காட்டுகிறது இந்த செயல். நாட்டுக்கு நேரு நிறைய செய்து இருக்கிறார். அதை அவர்களால் குறைக்க முடியாது. மாடர்ன் இந்தியாவின் வடிவமைத்தவரே நேருதான். வரலாறு இல்லாதவர்கள் மற்றவர்களின் வரலாற்றை அழிக்க முயல்கின்றனர். ஜனநாயகத்தின் பாதுகாவலராக நேரு இருந்தார்'' என்று தெரிவித்துள்ளார்.
''அற்பத்தனமான பழிவாங்கும் செயல் என்றாலே மோடிதான். கடந்த 59 ஆண்டுகளாக நேரு மியூசியம் மற்றும் நூலகம் உலக அறிவார்ந்தவர்களின் பொக்கிஷமாக இருந்து வருகிறது'' என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து இருக்கிறார்.
வேளாண் அமைச்சரின் பொறுப்புகள்: சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி!
ஒரு வம்சத்தின் பாரம்பரியத்தை காப்பாற்ற அனைத்துப் பிரதமர்களின் பாரம்பரியத்தையும் எப்படி அழிக்க வேண்டும் என்பது காங்கிரசுக்கு தெரியும் என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.
ஜேபி நட்டா என்ன சொன்னார்?
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை பிரதமரின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றம் செய்ததன் மூலம் அனைவரும் கௌரவிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ட்வீட் செய்துள்ளார். மேலும், ''காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். ஒரு பரம்பரைக்கு அப்பாற்பட்ட தலைவர்கள் நம் தேசத்திற்கு சேவை செய்து நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள் என்ற எளிய உண்மையை காங்கிரஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரதமரின் அருங்காட்சியகம் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு முயற்சியாகும். அதை உண்மையாக்கும் தொலைநோக்குப் பார்வை காங்கிரசுக்கு இல்லை.
ஒரு குடும்பத்தின் பாரம்பரியம் மட்டுமே உயிர்ப்பித்து இருக்க வேண்டும். மற்ற பிரதமர்களின் மரபுகளை துடைத்தெறிவதே காங்கிரஸின் அணுகுமுறையாக, முரண்பாடாக உள்ளது. பிரதமர் அருங்காட்சியகத்தால் ஒவ்வொரு பிரதமருக்கும் மரியாதை ஏற்படுகிறது'' என்று நட்டா தெரிவித்துள்ளார்.
பாஜக எம்பி நீரஜ் சேகர்:
பாஜகவின் எம்பியும், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனுமான நீரஜ் சேகரின் டுவிட்டர் பதிவில், எனது தந்தை முன்னாள் பிரதமருமான சந்திரசேகர் எப்போதும் தேச நலனுக்காக உழைத்தவர். அவரும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றினார். தற்போது அனைத்துக் கட்சிகளின் பிரதமர்களையும் பிரதமர் நரேந்திர மோடி கவுரவித்து இருக்கிறார். இதனால் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது காங்கிரசின் மோசமான அணுகுமுறை'' என்று குறிப்பிட்டுள்ளார்.