neet student suicide

நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தோல்வி பயத்தால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தேர்வு நடத்தும் முறை, தேர்வின் வினாத்தாள் குறித்து, வழக்குகள் தொடரப்பட்டன. 

அதனால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்தநிலையில், தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, விடைத்தாள் நகல், நேற்று முன்தினம், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியானது. இந்தநிலையில், தேர்வுக்கான விடைக்குறிப்பு இன்று வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்டிப்பூர் பகுதியை சேர்ந்தவர் மாணவி இஷிகா ராஜ் (17) தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இஷிகா ராஜ், பீகார், கோட்டாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் தங்கி நீட் தேர்வெழுதி இருந்தார்.

கடந்த சில நாட்களாக, நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற அவநம்பிக்கையில் இருந்துள்ளார் இஷிகா ராஜ்.

இந்த நிலையில், இஷிகா ராஜ், நேற்று தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து, காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இஷிகாவின் அறையில் போலீசார் சோதனையிட்டபோது, கடிதம் ஒன்றை அவர்கள் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், மாணவி இஷிகா ராஜ், நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டோம் என்பதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அதில் எழுதியுள்ளார். தனது பெற்றோரின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாததற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் இஷிகா எழுதி இருந்தார்.

கோட்டா பயிற்சி மையத்தில் இதுவரை 17 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது