பதினொன்று மொழிகளில் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினா தாள்கள் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு எழுத பொதுப்பிரிவு மாணவர்களுக்கான வயது வரம்பு அதிகபட்சமாக 25 ஆக நிர்ணையித்து, மத்திய கல்வி வாரியம் சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியும், வயது வரம்புகளை நிர்ணயிப்பதால், ஒருமுறை தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் அதிகபட்சமாக 4 முறை மட்டுமே மறுத்தேர்வு எழுதும் வாய்ப்பை பெறுகிறார்கள் என்றும் கூறி, இதனை ரத்து செய்வதால் இளைஞர்களின்
எதிர்காலத்திற்கு அது உதவியாக இருக்கும் என்றும் கூறி, மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், ''நீட் தீர்வு எழுத மத்திய கல்வி வாரியம் நிர்ணயித்துள்ள வயது உச்சரம்புகள் பற்றி ஆலோசித்தே இறுதி முடிவுகளை எடுக்க முடியும். எதற்காக வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அடுத்த விசாரணையில் சி.பி.எஸ்.ஈ தரப்பு தனது விளக்கத்தை அளிக்கவேண்டும். சிபிஎஸ்ஈ விளக்கம் அளிக்கும் வரை, பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது
உச்சவரம்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது'' என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினா தாள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2018 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினா தாள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உருது மொழியிலும் வினா தாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய
மற்றும் மாநில பாடதிட்டத்தின்கீழ் கேள்வி கேட்கப்படும். மாநில பாட திட்டத்தின் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்தும் கேள்வி கேட்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.