கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெங்களூரில் இயங்கிவரும் நம்ம பெங்களூரு அறக்கட்டளை, 56 செக்யூர் நிறுவனம் மற்றும் போக்குவரத்துக் காவல்துறையினருடன் இணைந்து சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஜனவரி 11 முதல் 17 வரை நடத்துகிறது. சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த நிகழ்வுகள் புதன்கிழமை தொடங்கின.
இந்திரா நகரில் உள்ள் கே.எஃப்.சி. சந்திப்பில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலையைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் எடுத்துக்கூறி ரோஜா மலர்களை அன்பளிப்பாக வழங்கினர்.
வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் கலந்துகொண்டவர்கள் வாகன ஓட்டிகள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வலியுறுத்தும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி நின்றனர்.

Cabinet Reshuffle: மத்திய அமைச்சரவை மாற்றத்தில் 12 பேரின் பதவிக்கு வேட்டு வைக்க வாய்ப்பு
இதனையொட்டி, சாலை பாதுகாப்பு குறித்த வானொலி நிகழ்ச்சி ஒன்றையும் இண்டிகோ 91.9 எஃப்.எம்.மில் ஒலிபரப்பானது. சாலையை பாதுகாப்பாக பயன்படுத்தி விபத்துகளைக் குறைப்பது பற்றி சமூக வலைத்தளங்களில் க்விஸ் போட்டி நடத்தப்பட்டது.
வாரம் முழுவதும் பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த நம்ம பெங்களூரு அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. “போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும், பாதுகாப்பு சட்டங்களை பின்பற்றவும் அறிவுறுத்தும் வகையில் இந்த இயக்கம் நகரின் முக்கிய சந்திப்புகளில் ஒரு வாரத்திற்கு நடத்தப்படும். இது வெற்றியடைய மக்களின் நிறைவான பங்கேற்பும் ஈடுபாடும் தேவை” என்று நம்ம பெங்களூரு அறக்கட்டளையின் பொது மேலாளர் வினோத் ஜேக்கப் தெரிவித்தார்.
