கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து மூத்த அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி டெல்லியில் நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒரே வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்துள்ள நிலையில் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று கர்நாடகாவில் முதல் முதலில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஒமிக்ரான் பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 616 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,623ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில், கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்த கொரோனா பாதிப்பு இன்று 1.50 லட்சத்தைக் கடந்துள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநிலங்கள் அந்தந்த பகுதிகளின் நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து மூத்த அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி டெல்லியில் நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி;- கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவில் உட்கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும். அவசரகால கொரோனா நிதி உள்ளிட்ட உதவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும். போர்க்கால அடிப்படையில் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கிளஸ்டர்களில் தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர கண்காணிப்பு தொடர வேண்டும். பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
