திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றங்களில் தினமும் வழக்கு விசாரணைகள் துவங்கப்படும் முன் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட வேண்டும் என தேச பக்தியில் பொங்கிய பாஜக பிரமுகரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திரையரங்குகளில் சினிமா திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதில் பல உள் உத்தர்வுகளை பிறப்பித்திருந்தது. இது நாடு முழுதும் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. இது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் தங்களது தேச பக்தியை நிருபிக்க வேண்டுமென நினைப்பது சரியா என விவாதம் எழுந்தது.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க உத்தரவிட வேண்டும் என ஷியாம் நாராயண் சவுக்சி என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்தது. மலிவான விளம்பரம் தேடும் இது போன்ற விஷயங்களில் தேசபக்தியில் பொங்கும் பாஜக பிரமுகர் ஒருவர் இன்னும் அதிகமாக சிந்தித்துவிட்டார் விளைவு.
தீர்ப்பு எழுதிய ஜட்ஜுகளும் தினமும் தேசிய கீதத்தை நீதிமன்றத்தில் ஒலிக்கவிட்டு பின்னர் நடவடிக்கைகளை துவக்க வேண்டும் என பொங்கிவிட்டார். நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைக்கு முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி பிரமுகரும் வழக்கறிஞருமான அஷ்வானி குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தனது மனுவை உரிய முறையில் சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார்.
இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுதாரர் அட்டார்னி ஜெனரலிடம் உதவி பெறுமாறு தெரிவித்தது.
