ஜி20 பாரத மண்டபத்தில் நடராஜர் சிலை: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ள பாரத மண்டபத்தில் நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்
ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லி பிரகதி மைதானம் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் (ITPO) உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏரளமான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வரவுள்ளனர். இதனால், தலைநகர் டெல்லி விழா கோலம் பூண்டுள்ளது.
அந்த வகையில், ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் நடைபெறவுள்ள பாரத் மண்டபத்தின் முகப்பில், பிரமாண்டமான நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 27 அடி உயரமும், 18 டன் எடையும் கொண்ட இந்த சிலையானது, அஷ்டதாதுக்கள் என அழைக்கப்படும் தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம், துத்தநாகம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி உலகிற்கு நல்லது: பிரதமர் மோடி!
தமிழகத்தின் புகழ்பெற்ற சிற்பியான சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினரால் 7 மாதங்களில் இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. சோழப் பேரரசு காலத்திலிருந்தே 34 தலைமுறைகளாக ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் சிலைகள் செய்து வருகின்றனர். சிலை அமைக்கும் திட்டத்தை கலாச்சார அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது.
பிரபஞ்ச ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் சக்தி ஆகியவற்றின் முக்கிய அடையாளமான நடராஜரின் இந்த சிலை ஜி20 உச்சிமாநாட்டில் ஒரு ஈர்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ள பாரத மண்டபத்தில் நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும்.” என பதிவிட்டுள்ளார்.