புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் கோட்டைக்குள் புகுந்து இந்திய விமானப்படையினர் அதிரடி தாக்குதலை நடத்தினர். இதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு பெருகி வரும் நிலையில், மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 14-ம் தேதி புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அதிகாலை இந்திய விமானப்படை விமானிகள் பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தாக்குதலையடுத்து மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து தேர்தல் நிபுணர்கள் கூறியதாவது; பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதல், மக்களவை தேர்தலில், மோடியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது. இதனால் மீண்டும் மோடியே பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பங்குச்சந்தை சிறிதளவு சரிந்தாலும், பின் வரும் நாட்களில் உயரும். எனவே, பங்குச் சந்தைகளில் மீண்டும் முதலீடு செய்ய, இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். கடந்த, 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்ற போது பங்குச்சந்தைகள் சரிந்தன. அதன் பின்னர் சில நாட்களில் மளமளவென உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.