மும்பை ஐஐடிக்கு ரூ.315 கோடி நன்கொடை கொடுத்த 'இன்போசிஸ்' நந்தன் நிலேகனி!
இந்த நன்கொடை மூலம் நந்தன் நிலேகனி மும்பை ஐஐடிக்குக் கொடுத்த நன்கொடை தொகை மொத்தம் 400 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி, தான் உயர்கல்வி கற்ற மும்பை ஐ.ஐ.டி. நிறுவனத்திற்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இதற்கு முன் இவரே ரூ.85 கோடி தொகையை நன்கொடையாக அளித்திருக்கிறார்.
உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அதிநவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காகவும் மும்பை ஐ.ஐ.டி.க்கு இந்த நன்கொடையைக் கொடுத்திருப்பதாக நிலேகனி தெரிவித்துள்ளார். நன்கொடை வழங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நந்தன் நிலேகனியும், மும்பை ஐஐடி பேராசிரியர் சுபாசிஸ் சவுத்ரியும் கையெழுத்திட்டுள்ளனர்.
சமஸ்கிருதம், இந்தியில் பட்டம் பெற்றவருக்கு தான் அரசு வேலையா? கொந்தளிக்கும் எம்.பி. சு.வெங்கடேசன்
மும்பை ஐஐடியின் முன்னாள் மாணவரான நிலேகனி, 1973ஆம் ஆண்டு மின் பொறியியல் துறையில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தார். தான் படித்த கல்வி நிறுவனத்துடன் 50 ஆண்டுகால தொடர்பை நினைவுகூரும் விதமாக 315 கோடி ரூபாய் நன்கொடையை வழங்குவதாக நிலேகனி சொல்கிறார். இந்த நன்கொடை மூலம் அவர் மும்பை ஐஐடிக்குக் கொடுத்த நன்கொடை தொகை மொத்தம் 400 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதற்கு முன் நிலேகனி வழங்கிய ரூ.85 கோடி நன்கொடை புதிய விடுதிகள் கட்டுவதற்கும், தகவல் தொழில்நுட்ப பள்ளிக்கான நிதி உதவிக்கும், நாட்டிலேயே முதல் முறையாக பல்கலையில் இன்குபேட்டரை நிறுவுவதற்கும், ஸ்டார்ட் அப் அமைப்பை உயர்த்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூலை 3ஆம் தேதி திறப்பு: உயர்கல்வித்துறை அறிவிப்பு
மும்பை ஐஐடியில் 62,500க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பட்டம் பெற்றுள்ளனர். 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மும்பை ஐஐடி நிர்வாகம் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 2030ஆம் ஆண்டுக்குள் 4,200 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி கடந்த நிதி ஆண்டில் 180 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. மும்பை ஐஐடி நிர்ணயித்த இலக்கு தொகையில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தை நந்தன் நிலேகனி ஒருவரே வழங்கிவிட்டார் என்பது குறிப்பித்தக்கது.
பயங்கரவாதி சஜித் மிருக்கு கொடை பிடிக்கும் சீனா: வெளுத்து வாங்கிய இந்தியா!!
நிலேகனி படிப்பை முடித்த பின்பும் பல விதங்களில் மும்பை ஐஐடியுடன் இணைந்திருந்தார். அவர் 1999 முதல் 2009 வரை ஐஐடி பாம்பே ஹெரிடேஜ் அறக்கட்டளையின் குழுவில் பணியாற்றினார். 2005 முதல் 2011 வரை மும்பை ஐஐடி கவர்னர்கள் குழுவில் இருந்தார்.
1999 இல் நிலேகனிக்கு சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது. 57வது பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதியாக 2019 இல் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றார். மும்பை ஐஐடியில் புதுமை மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தை (SINE) அமைப்பதில் நிலேகனி முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.