Asianet News TamilAsianet News Tamil

‘ஹஜ்’ புனிதப் பயணத்துக்கு மானியம் தரமுடியாது... அந்த பணத்தை கல்விக்கு செலவு செய்றோம்... மத்திய அரசு அதிரடி!

NAHCON sets May deadline for Hajj payment
NAHCON sets May deadline for Hajj payment
Author
First Published Nov 3, 2017, 8:54 PM IST


2018ம் ஆண்டில் இருந்து முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ‘ஹஜ்’ புனிதப் பயணத்துக்கு அளித்துவரும் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக அந்த தொகையை சிறுபான்மையினர் கல்விக்காக செலவிட முடிவு செய்துள்ளது.

எதிர்ப்பு

ஹஜ் மானியம் குறித்து ஆய்வு செய்ய இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட சிறப்பு குழு அளித்த பரிந்துரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முடிவுக்கு இந்திய ஹஜ் பயணக்குழு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

உத்தரவு

கடந்த 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மானியத்தை 2022ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

ஆலோசனை

அதன் அடிப்படையில் புதிய ‘ஹஜ்’ கொள்கை குறித்து ஆலோசிக்க மத்திய சிறுபான்மை அமைச்சகத்துறையின் மூத்த அதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், விமானப் போக்குவரத்துறை அதிகாரிகள்,  இந்திய ‘ஹஜ்’ குழுவினர் நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தின் முடிவில், அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே ‘ஹஜ்’ புனிதப்பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கல்வி, நலனுக்கு செலவு

இது குறித்து பெயர்வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில ஆலோசனைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஹஜ் பயணத்துக்கு அளிக்கப்பட்டுவரும் மானியத்தை சிறுபான்மையினர் கல்விக்கும், சிறுபான்மையினர் நலனுக்கும் செலவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மானியம் ரூ.650 கோடி மானியம் தரப்பட்ட நிலையில், படிப்படியாக குறைக்கப்பட்டு, கடந்த ஆண்டு இது ரூ.450 கோடியாக குறைக்கப்பட்டது’’ என்றார்.

பாதிப்பு

முஸ்லிம்களுக்கு மட்டும் ஹஜ்பயணத்துக்கு மானியம் அளிப்பது குறித்து இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மானியம் அளிப்பது மதச்சார்பற்ற நிலைக்கு மாறுபட்டதாக இருக்கிறது என்று தெரிவித்து வருகிறது.

இந்த மானியம் ரத்து என்பது, சிறுநகரங்கள், மாநிலங்களில் இருந்து செல்பவர்களைத்தான் கடுமையாகப் பாதிக்கும். அசாம்,ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து அதிகமானோர் செல்லாத நிலையில் அவற்றை பாதிக்காது.

1.70 லட்சம்

சிறுபான்மைத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சவூதி அரேபியாவுக்கு நேரடி விமானம் ஏதும் இல்லாத நிலையில், சிறுநகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளால்தான் விமானக் கட்டணம் அதிகரிக்கிறது. பெருநகரங்களில் இருந்து ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு பாதிக்காது. இந்த ஆண்டு 1.70 லட்சம் பயணிகள் ஹஜ் புனிதப்பயணம் செல்கிறார்கள்’’ என்றார்.

ஹஜ் புனிதப்பயணம் செல்லும் பயணிகளுக்கு மானியம் என்பது விமானக்கட்டணத்தில்தான் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios